அம்மா உணவக 4 பெண் ஊழியர்களுக்கு கொரோனா! அம்மா உணவகம் மூடல்!
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு. ஊரடங்கு சமயத்தில் யாருக்கும் உணவு கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு, 3 வேளையும் இலவசமாக உணவுகளை வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் நாகிரெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து அங்கு பணியாற்றும் 4 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகிரெட்டி தெருவில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.