விறுவிறுப்பாகும் வேலூர் தொகுதி அரசியல்களம்; திமுக கதிர் ஆனந்த் Vs ஏசி சண்முகம் கடும்போட்டி.! 



DMK MP Vellore Kathir Anand Make Tough to Opp Candidate

 

மக்களவை பொதுத்தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்காக ஓயாது உழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நடப்பு ஆண்டு மும்முனை போட்டி என்பது ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையில் கூட்டணியும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் கூட்டணியும், தேசிய அளவில் பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் என மாநில அரசியல்களம் விறுவிறுப்புடன் இருக்கிறது. 

வேலூர் தொகுதி நிலவரத்தை பொறுத்தமட்டில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் முதல் முறையாக களம்கண்ட திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்-க்கு மீண்டும் திமுக தலைமை வாய்ப்புகளை வழங்கியது. அத்தொகுதியில் இருந்து 10 விருப்ப மனுக்கள் பெறப்பட்டபோதிலும், மக்களுடன் இணைந்து பணியாற்றியது, பல நலத்திட்டங்களை மேற்கொண்டது, தனது மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணக்கமாக இருந்து மக்கள் நலப்பணிகளை செயல்படுத்தியது ஆகியவற்றின் பேரில் கதிருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ள பாஜக சார்பில், அத்தொகுதியில் போட்டியிடும் ஏசி சண்முகமும் தனது பங்குக்கு களமிறங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் வேறெங்கும் இல்லாத வகையில், வேலூர் தொகுதியில் கடும் போட்டித்தன்மையானது நிலவி வருகிறது. மக்களுக்கான பணியை 5 ஆண்டுகள் செய்து, மீண்டும் அவர்களிடம் வாய்ப்பு கேட்கும் கதிர் ஆனந்த் ஒருபுறம், மக்களால் முன்னதாக தோற்கடிக்கப்பட்ட ஏசி சண்முகம் மற்றொருபுறம் போராடி வருவதால், களம் அனல்பறக்கிறது. 

சத்துவாச்சாரியில் மக்கள் அனுதினம் அனுபவித்த துயரத்தை போக்க, நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் பிரதமர் நிதியில் சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தது, கேவி குப்பம் சுங்கச்சாவடியை போராட்டம் செய்து அகற்ற உதவியது, குடியாத்தத்தில் புறவழிச்சாலை அமைய காரணமாக இருந்தது என தான் பொறுப்பில் இருந்தபோது செய்த நலப்பணிகளை எடுத்துரைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  

எதிர்பார்ப்பில் போட்டியை ஏற்படுத்தும் ஏசி சண்முகமும் கடந்த 6 மாதமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம் என மக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கதிர் ஆனந்துக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை அவர் தக்கவைத்தததால், மீண்டும் திமுக தலைமை அவருக்கு அதே தொகுதியை போட்டியிட வாய்ப்பாக வழங்கியது. ஆனால், கடந்த தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற ஏசி, இம்முறை பாஜக சார்பில் களம்காண்கிறார். 

தற்போதைய நிலையில் திமுக, பாஜக அதிமுக என மும்முனை போட்டி நிலவுவதன் காரணமாக வெற்றி என்பது கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலின் முடிவில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெற்றி தெரியவரும் எனினும், கதிர் ஆனந்துக்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பது, அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வழங்கும் ஆதரவால் உறுதியாகிறது.