சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு; அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி தாக்குதல் விவகாரத்தில் இ.பி.எஸ் கொக்கரிப்பு.!



Edappadi Palanisamy Statement on Aruppukottai Woman DSP Attacked by Goons 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் காளிராஜ். இவர் சரக்கு வாகன ஓட்டுநர் ஆவார். சமீபத்தில் இவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் உறவினர்கள் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அப்போது, போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக பெண் டிஎஸ்பி காயத்ரி சமாதானம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து பின் தனது காருக்கு வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு இருந்த போராட்டக்காரர் ஒருவர் மேற்படி செல்ல முயற்சிக்க, அவரை பெண் டிஎஸ்பி தடுக்க முற்பட்டார். 

அவரின் கைகளை தட்டிவிட்டவாறு இளைஞர் முன்னேறி செல்ல, பெண் டிஎஸ்பி தடுக்க முற்பட்டபோது போராட்டக்காரர்களை சேர்ந்த ஒருவர் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தினார். அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: மை வி3 ஆட்ஸ் மோசடியை அம்பலப்படுத்திய அரசியல்கட்சி நிர்வாகியை கொலை செய்ய முயற்சி?.. பகீர் சம்பவம்.!

இதனிடையே, இவ்விவகாரத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. 

விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர், லேப் அசிஸ்டன்ட் உட்பட 4 பேர் கைது.!