குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தென்மாவட்ட பயணிகளுக்கு முக்கிய செய்தி; இனி பேருந்து கோயம்பேடு செல்லாது.. விபரம் இதோ.!
சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கவும், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளின் சிரமத்தை தவிர்க்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, தற்போது சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் (Kilambakkam Bus Stand) பகுதியில் 88 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம் என பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, கடலூர், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், பெங்களூர், பம்பை உட்பட வெளிமாநிலங்களுக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், கேரளா மாநில போக்குவரத்து கழகம் சார்பில் தொலைதூரப் பேருந்து சேவையானது இயக்கப்படும்.
அதேபோல, நகரின் பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளும் இங்கிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதமாக புறப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, நேற்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் ரூபாய் 396 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது. 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில், 215 அரசு பேருந்துகளும், 85 ஆம்னி பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ள இயலும்.
பிரம்மாண்டமான வாகன நிறுத்தம் வசதி காரணமாக கூடுதலாக 300 பேருந்துகள் நிறுத்திக் கொள்ளலாம். பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோரின் வாகனங்களை பாதுகாக்கும் பொருட்டு, 1.99 ஏக்கர் அளவில் 275 கார்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் உள்ளது. ஏடிஎம், கடைகள், கழிவறைகள், சிசிடிவி கேமிரா கண்காணிப்பு என பலவகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 14 நடைமேடைகள் கொண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, இன்று முதல் தென்மாவட்ட மக்களுக்கான பேருந்து பயணங்கள் தொடங்குகின்றன.
இது பலதரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து வந்த பேருந்துகள் அனைத்தும் கிளம்பாக்கத்தோடு நின்றுவிடும். அங்கிருந்து மாநகர பேருந்துகளில் நகரின் பல்வேறு பகுதிகளை சென்றடையலாம். சென்னையில் இருந்து இனி தொலைதூர பயணத்தை விரும்பினாலும், கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து பயணத்தை தொடங்கலாம்.