அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக கடிந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு; காரணம் என்ன?..! 



minister-mano-thangaraj-condemn-by-speaker-appavu

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பால்வளத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் பேசிய அமைச்சர், "2024 மக்களவை தேர்தலில், தேர்தலுக்கு முன்பு 400 தொகுதிகளை கைப்பற்றி, நாட்டின் பெயரான இந்தியாவை மாற்றுவோம், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என சிலர் கொக்கரித்தார்கள். 

ஆட்சியை பிடிக்க உள்ள வழிகளை கையில் எடுத்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை எதிர்க்கட்சிகள் மீது ஏவி, அவர்களை மிரட்டி, கையகப்படுத்தி பல்வேறு வேலைகளை செய்தபின்னரும், இந்திய துணைக்கண்டத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற மண்ணில், எதிர்ப்பு மற்றும் பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, உலகளவில்" என கூறினார். 

இதையும் படிங்க: 40 க்கு 40 நமதே.. வெற்றிசுடர் ஏந்திய தங்கங்களை நேரில் அழைத்து பாராட்டிய திமுக தலைவர்..!

அமைச்சரை கண்டித்த சபாநாயகர்

அமைச்சரின் பேச்சு அவரின் பதில் உரையில் இருந்து தாண்டி சென்றதால், அவரை இடைநிறுத்திய சபாநாயகர், உங்களின் பேச்சில் இருந்து தள்ளி செல்வதால் அதனை நிறுத்த வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு பதிலளித்த அமைச்சரோ, நாம் அரசியல்கட்சி, அரசியல் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். நீங்கள் எனது பேச்சை நிறுத்தும்முன், நான் பேசி முடித்துவிடுவேன் என கூறி அமைச்சர் உரையை தொடங்கினார். 

அவருக்கு அறிவுரை கூறிய சபாநாயகர், "மானிய கோரிக்கை குறித்த பதிலை பேசுங்கள், அதற்கு வெளியே வேண்டாம். அரசியல் குறித்து மேலோட்டமாக, நமது தலைவர்கள் குறித்து, சாதனைகள் குறித்து பேசுங்கள். அரசியலுக்கு வெளியே பேச வேண்டாம். அவைக்கு என மரியாதை உள்ளது. மூத்த அமைச்சர்கள் அனைவரும் விவாதங்களில் பதில் அளித்து பேசி இருந்தனர். மேடையில் பேசுவதுபோல பேசவேண்டாம். அது நாகரீகம் இல்லை. சபைக்கென உள்ள நாகரீகத்தை கடைபிடியுங்கள்" என்று கூறினார். 

பொய் - உண்மைக்கு புறம்பான வார்த்தையின் தொடக்கம்

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மனோ, "சபை நாகரிகம் இன்றி நான் பேசமாட்டேன். அது உங்களுக்கே தெரியும்" என கூறினார். பின் பேச தொடங்கிய அமைச்சர் பொய் என்ற வார்த்தையை பேச, குறுக்கிட்ட சபாநாயகர், "தேவையிலில்லாத வீண் பிரச்சனை தேவையில்லை. உங்களை போல எல்லோருக்கும் பல கருத்துக்கள் பேச அனைவர்க்கும் ஆசை உள்ளது. ஆனால், சபைக்கான மரியாதை நாம் கொடுக்க வேண்டும். மூத்த அமைச்சர்களின் பண்புக்கு வாருங்கள். பொய் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என கலைஞர் தான் உண்மைக்கு புறம்பான என்ற வார்த்தையை கொண்டு வந்தார் என கூறி கண்டித்தார்.