ஆயுத பூஜை முடிந்த மறுநாளே இப்படியா? கடும் சிரமத்துக்கு உள்ளான பயணிகள்!
நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியான ஆயுத பூஜை நேற்று இந்தியா முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. தொழில் சிறக்கவும், வாகனம், தங்கள் தொழிலுக்கு பயன்படும் ஆயுதங்கள் இவற்றிக்கு பூஜை செய்து மக்கள் வழிபட்டனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 முதல் தொடர் விடுமுறை என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும் சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். பண்டிகை நாட்கள் முடிவடைந்ததை அடுத்து மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
மேலும், நேற்று ஆயுத பூஜை என்பதால் பெரும்பாலான ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்கள் இன்று அதிகாலையில் தங்களது வழக்கமான வேலைக்கு திரும்பவில்லை. இதனால் சென்னையின் முக்கிய இடங்களான தாம்பரம், எக்மோர் போன்ற இடங்களில் ஆட்டோ, கால்டாக்சி கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
OLA மற்றும் Uber போன்ற செயலிகள் மூலமும் வாகனங்களை புக் செய்யமுடியாமல் போனும் கையுமாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதேபோல், பயண தொகையும் வழக்கத்தை விட பலமடங்கு அதிகமாக உள்ளது.
அதேபோல், பெரும்பாலான ஆட்டோ நிறுத்தங்களிலும் ஆட்டோ ஓட்டுனர்கள் பணிக்கு திரும்பாததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் கைக்குழந்தையுடன் வருபவர்கள், வீட்டில் இருந்து பொருட்களை அதிகம் எடுத்து வருபவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.