பருவதமலை ஏறும் வழியில் சடலமாக கிடந்த துறவி... போலீசார் விசாரணை...!
கலசப்பாக்கம் அருகில் உள்ள பருவத மலையில் அடையாளம் தெரியாத துறவி ஒருவர் சடலத்தை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கத்தை, அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் பருவதமலை உள்ளது. இந்த மலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் கிரிவலமும் வருகின்றனர்.
இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமிக்காக நேற்று முன்தினம் முதல் ஏராளமானோர் கிரிவலம் சென்று பர்வதமலை மீது ஏறி மல்லிகார்ஜுனேஸ்வரரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை பர்வதமலை மீது ஏறி செல்லும் வழியில், 300 வது படியில் 40 வயது மதிக்கத்தக்க துறவி ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அங்கிருந்தவர்கள் உடனடியாக கடலாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோயிலுக்கு செல்லும் வழியில் துறவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அதனால் அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து கடலாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இறந்து கிடந்த துறவி எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் இறந்ததற்கான காரணம் என்ன? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.