வாங்கிய கடனை கொடுத்ததும் தற்கொலை செய்யுமளவு அவதூறு பேச்சு: உயிரை மாய்த்த இளைஞரால் கண்ணீர் சோகம்.!



thoothukudi-kazhugumalai-man-suicide

 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை, கரடிகுளம் சின்ன காலனி பகுதியில் வசித்து வருபவர் மாடசாமி. இவரின் மகன் கதிரவன் (வயது 34). அப்பகுதியில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கதிரவனின் மனைவி பேச்சியம்மாள். தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

கடந்த ஒன்றாம் தேதி கதிரவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தகவல் அறிந்த கழுகுமலை காவல்துறையினர் கதிரவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சிகளும் தகவல் தெரிய வந்தது. 

தற்கொலை செய்து கொண்ட கதிரவன் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி மாணிக்கத்திடம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 5000 கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு வாரம் ரூபாய் 500 வட்டிக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடனை இடையில் சரிவர செலுத்த முடியவில்லை. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கதிரவன் மற்றும் அவரது மனைவி பேச்சியம்மாள் ஆகியோர் மாணிக்கத்திடம் ரூபாய் ஏழாயிரம் பணம் கொடுத்து கணக்கை முடித்து சரி செய்ய கூறியிருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி கதிரவன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற நிலையில், மாணிக்கத்தின் கணவர் நடராஜன் கடன் தொகை கொடுத்து கேட்டிருக்கிறார். 

பணம் கொடுத்து கணக்கை முடித்து விட்டதாக கதிரவன் கூறவே, வேலைக்கு சென்ற அவசரத்தில் கீழே இறங்காமல் வாகனத்தில் இருந்தவாறு பேசியதாக தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், மரியாதை இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எப்படி அமர்ந்து பேசுவாய்? என அதட்டி வாக்குவாதம் செய்துள்ளார். 

ஒரு கட்டத்தில் கோபமடைந்து நடராஜன் உனது வீட்டிற்கு வந்து மூக்கை உடைத்து விடுவேன் என்று கூறவே, வாங்கிய கடனை கணக்கு வழக்கு பார்த்து முடிக்க வேண்டும். இல்லையேல் நீ வேலை பார்க்க முடியாது. வேலையை நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரவும் நடராஜன் தெரிவித்துள்ளார். 

வேலை முடிய தாமதமாகும் என்று கதிரவன் கூறியபோதும், மரியாதை குறைவாக பேசி நிலையில் ரூபாய் 16 ஆயிரம் பணம் கட்டுமாறும் மிரட்டி இருக்கிறார். கதிரவனின் ஜாதி குறித்தும் திட்டியதாக தெரிகிறது. இதனை கதிரவன் ஆடியோவாக பதிவு செய்து தனது நண்பர்களிடமும் காண்பித்த நிலையில், தனது குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் புலம்பி இருக்கிறார். அவர்கள் மனதை தேற்றி இருக்கின்றனர். 

இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, நடராஜன் மிரட்டியதாக கூறப்படும் ஆடியோவை கைப்பற்றிய காவல் துறையினர், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள பணவடலிசத்திரம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர் என்றும், ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

செப்டம்பர் 17ஆம் தேதி பரோலில் வெளியே வந்து, பின் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி சிறைக்கு செல்லவிருந்த நிலையில் தான் அப்பாவியை அவதூறாக பேசி தற்கொலை செய்ய வைத்திருக்கிறார். தற்போது நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.