இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
#BigBreaking: மாநாடு மிகப்பெரிய வெற்றி - தவெக தலைவர் விஜய் நெஞ்சார்ந்த நன்றி..! பரபரப்பாகும் அரசியல்களம்.!
கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை அறிவிப்பு மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல இலட்சக்கணக்கான நடிகர் விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் கட்சியின் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டது.
அதிகாரத்தில் பங்கு
அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் ஊழல், மதவாத பிளவுவாத அரசியல் ஆகியவற்றை எதிர்த்து பேசினார். மேலும், திராவிட மாடல், மோடிமஸ்தான் வேலை, பாசிசம்-பாயசம் என திமுக, பாஜகவை நேரடியாக தாக்கி பேசி இருந்தார். அனைவருக்குமான சமஉரிமை என்ற கோட்பாட்டின் கீழ் தொடங்கப்பட்டுள்ள தனது கட்சியில், யார் கூட்டணி அமைத்தாலும், தேர்தலில் வெற்றி அடைந்து அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் மாயம்., 74 கிமீ நடந்து வீடுவந்து சேர்ந்த சிறுவன்.. ஆரத்தழுவி கண்ணீருடன் தாய் வரவேற்பு.!
மாநாடு மரணங்கள்
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கில்லி சீனிவாசன், துணை தலைவர் விஜய் கலை, தொண்டர்களாக சென்னை பாரிமுனை வசந்தகுமார், ரியாஸ், செஞ்சி உதயகுமார், வில்லிவாக்கம் சார்லஸ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு கட்சியின் சார்பிலும், விஜயின் சார்பிலும் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநாட்டுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் ௮தைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். ௮தினும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
நிர்வாகிகளுக்கு நன்றிகள்:
குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய நம் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள், திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச்செயலாளருடன் பணிகளைப் பகீர்ந்துகொண்ட பொருளாளர் திரு. பி.வெங்கட்டராமன் அவர்கள், கழகத்தின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த திரு. ஆர்.பரணிபாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், திரு. என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு.ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் மக்களுக்கு சிறப்பு நன்றி:
தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் திரு. ஜே.பி.விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றி. மாநாட்டில், நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும். சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. ௮வர்கள் அனைவருக்கும் நன்றி.
உங்களை போற்றத் தெரியவில்லை:
மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படூத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள்.. சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை.
கோடிப்பூக்களை தூவுகிறேன்:
இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கழகத் தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.
வெற்றி ஒளியை கண்டேன்:
உங்கள் ஒவ்வாருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிமும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன்.
உங்களை தோழர்களாக பெற்றது வரம்:
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை, மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? (இவை எல்லாவற்றையும், அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன். இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.
விமர்சனங்கள் இருக்கும், ஆக்கபூர்வமானதை எடுத்துக்கொள்ளுங்கள்:
என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான, கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி கன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம். அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக' கருக்கும்.
வி சாலையின் ரகசியம் வியூகம், விவேகம், வெற்றி:
நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதீக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— TVK Vijay (@tvkvijayhq) October 29, 2024
இதையும் படிங்க: #Breaking: "ஈடு செய்யவே இயலாத துயரம்" - தவெக தொண்டர்கள் 6 பேர் மறைவு; நடிகர் விஜய் இரங்கல்.!