உச்சத்தை எட்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல்..!! சீனாவில் அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்..!!
புதிய வகை கொரோனா தொற்றால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீன நாட்டின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்த நாட்டை உலுக்கியதுடன், உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்த நேரத்தில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டின.
தற்போது உலக அளவில் கொரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சீனாவில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா தொற்றால் அந்த நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் என்று அழைக்கப்படும் உருமாற்றம் அடைந்த கொரோனா அலையை எதிர்கொள்ள சீனா தயாராகி வருவதாக அந்த நாட்டின் மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை மேற்கோள் காட்டி சீன ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஓமிக்ரான் வைரசின் புதிய உருமாறிய தொற்றால், சீனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதியில் வாரந்தோறும் 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜீன் மாத இறுதியில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும் என்பதால் சீன மக்கள் அச்சமடைந்துள்ளனர்.