சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்களின் நிலையை பாருங்கள்! ஐயப்பன் தண்டித்து விட்டாரா?
கடந்த மாதம் சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கு சென்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பெண்களுடைய வாழ்க்கை நிம்மதி இழந்து காணப்படுகிறது. இவர்களை ஐயப்பன்தான் தண்டிக்கிறாரா என்றும் பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண் முதன்முதலில் தனது குழந்தைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால் ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடியதால் அவர் திரும்பச் சென்றார். இதே போல் பல பெண்கள் சன்னதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போனது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிதா என்ற பத்திரிகையாளரும், ரஹானா ஃபாத்திமா என்ற மாடலும் அய்யப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். ஆனால் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கேரளாவில் பம்பை பகுதியில் கலவரம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்களுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடந்துவருகின்றன. சபரிமலைக்குச் சென்ற பெண்களில் ஒருவரான அரசுப் பள்ளி ஆசிரியை பிந்து தங்கம் கல்யாணி நிம்மதி இல்லாமல் அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் இருந்து மாற்றல் வாங்கிக்கொண்டு அட்டப்பாடி அகழி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடர்கிறார். அகழி பள்ளியில் முதல்நாள் வகுப்புக்குச் செல்லும்போதே சரணகோஷம் முழங்கி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பிந்துவை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் பணிபுரியும் பள்ளிக்கு எதிரே பல்வேறு போராட்டங்களையும் ஐயப்ப கர்ம சமிதி நடத்திவருகிறது. ``அரசு கூறியதாலேயே பிந்து சபரிமலைக்குச் சென்றார். தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மனம் வேதனைப்படும்படி சமூக தளங்களில் பதிவிடுகிறார். அட்டப்பாடியில் பக்தர்களைச் சீர்குலைக்கவே பிந்து வந்திருக்கிறார்" என்று கூறுகிறார்கள் போராட்டக்காரர்கள். ``கர்ம சமிதி என்ற பெயரில் சங்கபரிவார் ஆதிவாசிகளைத் தவறாக வழிநடத்தி தனக்கு எதிராகத் திருப்பி விடுகிறார்கள்" என்று ஆதங்கப்படுகிறார் பிந்து.
அதேபோல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ரஹானா பாத்திமா பலமுறை இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் எங்கெல்லாம் மாற்றலாகிச் சென்றாரோ அந்த அலுவலகங்கள் முன்பு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ரஹானா பாத்திமா மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீனுக்காக அவர் நீதிமன்றத்துக்கு அலைந்துவருகிறார்.
இவ்வாறு சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.