"அந்த மனசு தான் சார் கடவுள்.." மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் நன்கொடை.! 'K.P.Y' பாலாவின் தரமான செயல்.!



cook-with-komali-kpy-bala-donates-an-ambulance-to-tribe

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் பாலா.

ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த நெக்னாமலை கிராமம், கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 172 குடும்பங்களில் சுமார் 750 பேர் வசிக்கும் நிலையில், இன்று வரையிலும் அப்பகுதிக்கு முறையான சாலைவசதி இல்லாததால் அன்றாட தேவைக்கும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கும் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், கர்ப்பிணிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி அதன் மூலம் சுமந்து செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. 

KPY Balaஇதுதொடர்பான செய்தி வெளியான நிலையில் இதனை அறிந்த நடிகர் பாலா, நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று உதவினார். முன்னதாக நெக்னாமலை கிராமத்துக்கு சென்ற பாலாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து மருத்துவத் தேவைக்கு உரிய வாகன வசதியின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.

KPY Balaஇதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பாலா "கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக டோலி கட்டி இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதை அறிந்து கவலை அடைந்ததாகவும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியதால் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக" கூறினார். கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்கள் கூட அரசியல் நிமித்தமாகவே இந்த உதவிகளை செய்வார்கள். ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத பாலாவின் இந்த செயல் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.