டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 கோடி மற்றும் அரசு வேலை!



2 crores for the family of the dead in the Delhi riots

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்ட  ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

இந்நிலையில், தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் என்பவர் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர்.

இந்தநிலையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்க்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன. இதுகுறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லி வன்முறையில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.