நொய்டா, 15-அடியில் ஆறு வழி விரைவுச் சாலையில்... உருவான பள்ளம்... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!



Noida, 15-feet six-lane expressway... a pothole formed... motorists in shock..

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் இருக்கும் கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 15 அடி நீளம், 2 அடி அகலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.

உத்தரப் பிரதேசத்தையும், நொய்டாவைவும் இனைக்கும் ஆறு வழி நெடுஞ்சாலையான கிரெட்டர் நொய்டா விரைவுச் சாலை 400 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டது. சுமார் 25 கி.மீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை பரிதாபாத், பல்லாப்கர் மற்றும் பல்வால் ஆகிய நகர்களை இணைக்கிறது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகள் என்பதால், நெரிசலை கட்டுப்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த விரைவுச்சாலை போடப்பட்டது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வரும் இந்த விரைவு சாலையில் நேற்று திடீரென பெரும் பள்ளம் உண்டானது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். செக்டார் 96 என்ற பகுதியில் இருக்கும் சூப்பர்டெக் கட்டத்திற்கு எதிரே உள்ள விரைவு சாலையில் 15 அடி நீளம், 2 அடி அகலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டதால், டிராபிக் காவலர்கள் இதை உடனடியாக கவனித்து அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை முழுவதும்  சீரமைப்பு பணிகள், மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு, இன்று போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

இதேபோல், கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலை, ஒரே வாரத்தில் கனமழை காரணமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் சாலை அமைப்பதில் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை அமைத்துள்ளனர், என குற்றம்சாட்டி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.