வீடுகளில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் இதுதான்: பூஜையை போடுங்க அவன் அருளை பெறுங்க..!!
இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த நேரமாகும்.
முழுமுதற் கடவுளாகவும், வினைதீர்க்கும் விநாயகனாகவும் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர், சதுர்த்தி திதியில் பிறந்தவர். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் சோபகிருது வருடமான இந்த வருடம் புரட்டாசி மாதம் 1 ஆம் தேதியான இன்று ஆவணி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி என்பதால், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கடந்த 14 தேதி அமாவாசை என்பதால் அடுத்த 15 நாட்கள் வளர்பிறை நாட்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பல்வேறு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
பஞ்சாங்கதின் படி இன்று காலை 11.38 பின்பு சதுர்த்தி திதி வருவதாலும், நண்பகல் 12 மணிக்கு எமகண்டம் முடிவடைவதாலும், நண்பகல் 12 மணிக்கு மேல் வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த நேரமாகும்.