திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காரணமாக பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பதி கோயிலில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 10 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.