அண்ணாமலை தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பேசிவந்தால் அவதூறு வழக்கு பாயும்: அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை..!



Annamalai will be prosecuted if false allegations are made

உள்நோக்கத்துடன் தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்  என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சி.இ.ஓ பதவியை புதிதாக உருவாக்கியதாக நினைத்து குறை கூறுகிறார். ஆனால், இந்த பதவி  1978 ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதுவரை 46 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இந்த பதவியில் இருந்துள்ளனர்.

கோயம்புத்தூர் விவகாரத்தில் அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார், சிவமாணிக்கம் என்பவர் கடந்த 2019 டிசம்பர் 12 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். 2021 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. சிவமாணிக்கத்திடம் இருந்து  ஜி-ஸ்கொயர் நிறுவனம் வாங்கியிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதி கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது.

ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதையும் அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின் படியே அனுமதி வழங்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் மிக விரைவாக அனுமதி அளித்ததுபோல அண்ணாமலை கூறுகிறார். அனுமதி அளிக்கப்பட்ட போது அ.தி.மு.க ஆட்சியே இருந்தது என்பதை கவனிக்க வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். சி.எம்.டி.ஏ-வில் அண்ணாமலையையே  சி.இ.ஓ பதவியில் அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது. அண்ணாமலை ஏதாவது லே-அவுட் போட்டுள்ளாரா?. அண்ணாமலைக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுமெனில் உரிய ஆவனங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் .

ஜி-ஸ்கொயர் நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. நீண்ட காலமாக அனுமதி கிடைக்காத நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க சிறப்பு முகாம் கூட நடத்த தயார்.

அண்ணாமலை சரியான ஆதரங்களோடு பேசினால் நல்லது. சரியான விவரங்களை திருத்திக்கொள்ள தயார். ஆனால், உள்நோக்கத்துடன் தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும்  என்று கூறினார்.