தி.மு.க-அ.தி.மு.கவினரிடையே மோதல்: வாக்குச்சாவடி அருகே பரபரப்பு!.
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க சார்பில் தென்னரசு, தே.மு.தி.க சார்பில் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேனகா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் தி.மு.க கூட்டணிக்கும், அ.தி.மு.க கூட்டணிக்கும் நேரடி போட்டி நடைபெற்று வருவதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினரிடையே வாக்கு சேகரிப்பு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் ஈரோடு பெரியார் நகர் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு பெரியார் நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு குவிந்த காவல்துறையினர் இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அந்த பகுதியில் அமைதி திரும்பியது. இந்த சம்பவத்தால் ஈரோடு பெரியார் நகர் வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.