அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் அதிரடி..!



Enforcement Directorate inquiry against Minister Anitha Radhakrishnan

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் அவரது சொத்துக்களையும் முடக்கியது.

இதனை தொடர்ந்து, சொத்துக்களை முடக்கிய அமலாக்கதுறையின் நடவடிக்கையை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, சட்டவிரோத பணபரிமாற்றம் தடைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.