துறை செயலாளராக பதவி உயர்வு பெறும் ககன் தீப் சிங் ஐ.ஏ.எஸ்: முதல்வரின் கான்வாயில் தொங்கியதற்கு பரிசா..?!
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்ற ஆளுனர் டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் துறைக்கு செயலாளராக சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கும் ககன் தீப் சிங் பேடியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாண்டஸ் புயலால் பாதிப்புக்குள்ளான சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சரின் கான்வாயில் தொங்கிய சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா ஆகியோருடன் கடைசியாக ககன் தீப் சிங் இணைந்தார். முதலமைச்சரின் கான்வாயில் தொங்கியதற்காக இந்த பரிசா? சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.