தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வேகத்தில் மிரட்டிய சமி! ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் வெற்றி பெறலாம்.
பெர்த்தில் நடைபெற்றுவரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
43 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி ஆடத் தொடங்கி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் பெய்ன் 8 ரன்னிலும், கவாஜா 41 ரன்னிலும் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
நான்காவது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி விக்கெட் எதையும் இழக்கவில்லை. கவாஜா அரைசதம் அடித்தார். இவர்களது விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். உணவு இடைவேளேயின் போது, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் முகமது ஷமி வீசிய 79-வது ஓவரில் 5-வது பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெய்ன் 37 ரன்களில் வெளியேறினார். அந்த ஓவரின் அடுத்த பந்திலேயே காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பேட் செய்ய வந்த ஆரோன் பிஞ்ச் கிளவுஸில் பந்துபட்டு, ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சமி வீசிய 82-வது ஓவரில் நங்கூரமாக நிலைத்து நின்று ஆடிய கவாஜாவை வெளியேற்றினார் ஷமி. ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார் கவாஜா. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு ரன்னில் போல்டாகி வெளியேறினார். பின்னர் சமி வீசிய 87 வது ஓவரில் லியான் அவுட்டாகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் சிறப்பாக ஆடினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசினார். இவர்கள் விக்கெட்டை எடுக்க மிகவும் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் பும்ரா வீசிய பந்தில் ஸ்டார்க் 14 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இவர்கள் கடைசி விக்கெட்டிற்கு 36 ரன்கள் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் வேகப்பந்துவீச்சாளர் சமி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் மீதமுள்ள இன்னும் ஒரு நாளில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் வெற்றி பெறலாம்.