உலக கோப்பை டி-20 தொடர்: ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?!.. பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதல்..!



india-pakistan-clash-in-the-3rd-match-of-the-super-12-r

எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரிலேயாவில் நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து-ஆப்பானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று தொடங்கும் 3 வது போட்டியில், பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். முதல் போட்டியில் வெற்றி பெற்றால் கூடுதல் பலத்துடன் அடுத்த போட்டிகளை எதிர் கொண்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதால் இந்திய அணி இந்திய அணி தனது முழு பலத்துடன் களமிறங்கும்.

முன்னதாக 2021 உலக கோப்பை டி-20 தொடரில் முதன் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான், இம்முறை நம்பிக்கையுடன் களமிறங்கும். இரு அணிகளுக்கு இடையிலான மோதலில், உலக கோப்பை போட்டிகளை பொறுத்த வரையில் இந்தியாவின் கையே மேலோங்கியுள்ளது.

50 ஓவர் உலக கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 7-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. டி-20 உலக கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் 5-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இன்று மெல்போர்னில் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூப்பர் 12 சுற்று போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஸர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் அல்லது முகமது ஷமி, யுவேந்திர சஹல் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, இப்திகர் அகமது, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதப் கான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.