சரவெடி ஆட்டம்.. தெறிக்கவிட்ட இஷான் கிஷன், ஸ்ரேயஸ் அய்யர்.! முதல் போட்டிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி.!



india won second one day

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக இருதரப்புக்கும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் துவக்க வீரர்களாக  டி காக் மற்றும் மலன் களமிறங்கினர். டி காக் 5 ரன்களிலும், மலன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 74 ரன்களும், மார்க்ரம் 79 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து  279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவனும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தவன் 13 ரன்களும், கில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக இஷான் கிஷனும், ஸ்ரேயஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியில் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். இஷான் கிஷன் 93 ரன்கள் எடுத்தநிலையில் சதத்தை தவறவிட்டு  ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடியாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் 113 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றிபெற்றது.