உலக கோப்பை டி-20 தொடர்: கூலாக விளையாடிய இந்திய அணிக்கு எதிராக போராடிய நெதர்லாந்து..!



netherlands-lost-123-runs-for-the-loss-of-9-wickets-by

எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  டி-20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

இந்த நிலையில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி இந்திய அணிக்கு தொடக்கம் அளித்தது.

கே.எல்ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து ரோஹித் சர்மா- விராட் கோலி இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். சீரான இடைவெளியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார். 53 ரன்களில் ஆட்டமிழக்க கோலியுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டை சுழற்றினார்.

கோலி நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்திசெய்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 180 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது முதல் ஓவரில் சாமர்த்தியமான பந்துவீச்சின் மூலம் தண்ணீர் காட்டினார். 2 வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அதனை தொடர்ந்து 3 வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் தந்து 2 ஓவரையும் மெய்டனாக வீசியதுடன் முதல் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 2 வது வெற்றியை சுவைத்த இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.