திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து.! மாஸ்டர், ஈஸ்வரன் ரிலீஸ் ஆகுமா.?



50% seats only allowed in tamilnadu theatres

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், திரையரங்கு விவகாரத்தில் பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல என கூறியது.

இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பலாம் என்ற முந்தைய உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையை கவனத்தில் கொண்டும் திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

theatre

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும்போது நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பை அடுத்து, 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலரிடையே அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதால், பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்த மாஸ்டர், ஈஸ்வரன் தயாரிப்புக்குழுவினர் குறித்த தேதியில் படத்தை திரையிடுவார்களா அல்லது தள்ளிப்போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள், திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.