மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மலைப்பாதையில் ஓடிய காரில் திடீரென பற்றிய தீ: நீண்ட நேரம் அவதிக்குள்ளான பயணிகள்..!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலையை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி 4 பயணிகளுடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையில் உள்ள 19 வது கொண்டை ஊசி வளைவை கடந்த போது காரின் முன்புறம் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்திற்குள் கார் முழுவதும் பரவியது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தினார். இதன் பின்னர், ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பியோடினர். இதற்கிடையே சாலையில் நின்ற கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட உள்ளூர் வாகன ஓட்டுனர்கள் இந்த சம்பவம் குறித்து ஆசனுர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து காரணமாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.