"அவர்களால் காலூன்ற மட்டுமே முடியும்; ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாது" நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகியிருந்த கஸ்தூரி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருசில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமன்றி இவர் அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் வெளியிட்டுவருகிறார். அவருடைய கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்போலோவில் அளிக்கப்பட்ட இட்லியை பற்றி கேலியாக பேசியிருந்தார் "அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா" என கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய நினைப்பது பற்றியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றியும் தனது கருத்துகளை பதிவு செய்தார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இவர் பேசியுள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
"ஒரு தொழிற்சலையில் முறைகேடு நடைபெற்று இருந்தால் முறைகேடுகளை சரி செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆலையை இயங்க செய்ய வேண்டும். இந்த ஆலையை மூடி உள்ளதால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை தவிர அந்த தொழிற்சாலையை மையமாக வைத்து அதை சுற்றி நடைபெற்ற சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. யாரையும் பாதிக்காத அளவில் தான் ஒரு போராட்டம் இருக்க வேண்டும். ஆலையை திறக்கவே கூடாது என்று போராடுவது ஒரு தவறான போராட்டமாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பதைப் பற்றி பேசிய அவர், "தமிழகத்தில் பாஜக வேண்டுமானால் ஒரு கால் ஊன்ற வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அவர்களே நினைக்க மாட்டார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்தநிலையில் தான் மற்ற கட்சிகள் அனைத்தும். தமிழகத்தின் அரசியல் என்றைக்கும் தேசிய நீரோட்டத்தில் கலக்காது" என்று தெரிவித்துள்ளார்.