சுபஸ்ரீ உயிரை காவு வாங்கிய அதே இடத்தில் மீண்டும் நடந்த சோகம்!



again one accident in pallikaranai

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது,  அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் இந்த சம்பவம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டனர்.

subasri

இதனையடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் விளம்பர பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது 50 அடி உயரத்தில் இருந்து பேனர் கீழே சாய்ந்ததில் ராஜேஷ் என்ற ஊழியர் படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுபஸ்ரீ உயிரிழந்த அதே சாலையில் உள்ள பகுதியில் மீண்டும் பேனர் சரிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.