டெக்னாலஜி மயமாகும் தமிழக அரசு பள்ளிகள்; வருகை பதிவிற்கு பயோமெட்ரிக் கருவிகள் அறிமுகம்.!
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் அமைக்கும் பணி அரசு பள்ளிகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபகாலமாக பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதன் முதற்கட்டமாக நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்டூடியோ நிறுவனம் ஆரம்பித்து அதன்மூலம் திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் பாடங்களை புதிய சேனல் ஆரம்பித்து ஒளிபரப்பப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இத்திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கலந்து ஆலோசித்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவை பதிவு செய்ய அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி விரைவில் நடைபெற இருக்கிறது.
முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேர் பயன்பெறுவர்.
இதேபோல் 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேரும் பயன்பெறுவர். இதற்காக ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக் வழங்கினார். அதையே பள்ளிக்கல்வி இயக்குநரும் பரிந்துரை செய்தார்.
இவற்றை பரிசீலித்து, 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.