மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் குரலில் பேசி, சென்னை தொழிலதிபருக்கு நாமம் போட்ட 2 வடமாநில சகோதரர்கள்.. நைஜீரியருக்கு வலைவீச்சு.!
மயக்கவைக்கும் பெண்ணின் குரலில் வழிந்து பேசி சென்னை தொழிலதிபரிடம் ரூ.14 இலட்சம் மோசடி செய்த வடமாநில சகோதரர்களை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான முதியவர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், "எனக்கு வாட்சப் எண் மூலமாக பெண்ணொருவர் மெசேஜ் அனுப்பி, நான் இலண்டனை சேர்ந்த இவா வில்லியம்ஸ் என்று அறிமுகம் செய்தார். முதலில் எளிமையுடன் பழகி வந்த பெண்மணி, நாளடைவில் தன்னை பணக்காரர் போல் பாவித்து, சென்னையில் நிலம் வாங்க வேண்டும் என்று கூறி, நிலத்தினை பார்க்க விரைவில் சென்னை வருவதாகவும் தெரிவித்து இருந்தார். பின்னர், ஒருநாள் எனக்கு தொடர்பு கொண்ட பெண்மணி, இந்தியா வந்துவிட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும், நிலம் வாங்குவதற்கான ரூ.5 கோடி வரைவோலையை வைத்துள்ளதால், டெல்லியில் விமான நிலைய சுங்கத்துறையினர் என்னை பிடித்து வைத்துள்ளனர். அதற்கான வாரியாக ரூ.14 இலட்சம் செலுத்தினால், வரைவோலையுடன் நான் வருகிறேன் என கூறி, அந்த தொகையையும் சேர்த்து சென்னையில் தந்துவிடுகிறேன் என கூறினார். சில ஆண் அதிகாரிகளும் சுங்கத்துறையினர் போல பேசிய நிலையில், அதனை நம்பி பெண்ணின் 6 வங்கிக்கணக்கிற்கு ரூ.14.62 இலட்சத்தை பிரித்து அனுப்பினேன். மீண்டும் பெண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, அது ஸ்விச் ஆப் என வந்தது. அப்போதுதான் மோசடி நபர்களால் நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனது பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, முதியவர் அனுப்பிய வங்கிக்கணக்கின் விபரத்தை ஆய்வு செய்தபோது, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் ஏ.டி.எம் மூலமாக பணம் எடுக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து உத்திரபிரதேசம் விரைந்த காவல் துறையினர், சி.சி.டி.வி. கேமிராவை கண்காணித்துள்ளனர். குறித்த நேரத்தில் ரூ.14 இலட்சம் எடுத்த நபரின் அலைபேசி எண்ணை கண்டறிந்து, டெல்லியை சேர்ந்த மஜித் சல்மானி, அவரின் சகோதரர் ஷானு ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், சகோதரர்கள் இருவரும் உத்திர பிரதேசம் மாநிலத்திலேயே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதும் அம்பலமானது.
கடந்த 2019 ஆம் வருடம் மோசடி வழக்கில் சிக்கிய சகோதரர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், நைஜீரிய நாட்டினை சேர்ந்த இம்மானுவேல் என்பவருடன் பழகியுள்ளனர். அவர் டெல்லியில் தங்கியிருந்து மோசடி செயலை செய்து வந்த நிலையில், அவரின் யோசனையின் பேரில் சகோதரர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி செய்யப்படும் பணத்தில் பங்கு பெற்றுக்கொண்டு சகோதாரர்கள் அடுத்த மோசடிக்கு சென்றுவிடுவார்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 10 டெபிட் கார்டு, 3 செல்போன் மற்றும் சிம் கார்டுகள் போன்றவையும் கைப்பற்றப்பட்ட்டன. சகோதர்கள் கைதை அறிந்துகொண்ட இமானுவேல் தலைமறைவாகவே, அவரை பிடிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், இமானுவேலின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.51 ஆயிரம் ரொக்கம், 4 லேப்டாப், 10 செல்போன், 9 சிம் கார்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.