விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.! அதிரடி நடவடிக்கைகளால் ஒரு மணி நேரத்திலேயே மீட்பு!!
சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் திருமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவர் பெருங்களத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் வர்ஷா. 4 வயது நிறைந்த அவர் இன்று மாலை தங்களது வீட்டிற்கு வெளியே அருகிலிருந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் வர்ஷாவை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.
இதனை கண்டு பதறிப்போன அங்கிருந்த சிறுவர்கள் உடனே வீட்டிற்கு ஓடிசென்று வர்ஷாவின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வினோத் உடனே தாமதிக்காமல் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனே வயர்லெஸ் மூலம் மற்ற போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன சோதனையை தீவிரபடுத்தியுள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஐ.டி மேம்பாலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்த குரோம்பேட்டை போலீசார் சிறுமியைக் கடத்தி செல்லப்பட்ட ஆட்டோவை மடக்கி பிடித்து வர்ஷாவை மீட்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து விசாரித்ததில் சிறுமியை கடத்தியவர் குரோம்பேட்டையை சேர்ந்த சம்சுதீன் என்ற இளைஞர் என தெரியவந்தது. மீட்கப்பட்ட குழந்தையை வீட்டிற்கே அழைத்து சென்று போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனராம். மேலும் சிறுமியை கடத்தி சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்திலேயே மீட்ட போலீசார்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.