பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முகநூலில் வலைவிரித்து, இலட்சக்கணக்கில் மோசடி.. தொழிலதிபர்கள் டார்கெட்.. மக்களே கவனம்..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம், மச்சாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் சங்கர். இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். முகநூல் மூலமாக அறிமுகப்பட்ட பெண்ணிடம் ரூ.25 இலட்சம் கொடுத்து ஏமார்ந்துவிட்டேன் என கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரில், "எனக்கு முகநூல் மூலமாக அறிமுகமான பெண்மணி இலண்டனில் வசிப்பதாக தெரிவித்தார். அவரின் பெயர் குளோரியா என்றும் அறிமுகம் செய்து நட்பாக பழகி வந்தார். பின்னர், தன்னை மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் என்று தெரிவித்த நிலையில், மூலிகை எண்ணெய் விற்பனை செய்வதற்கான டீலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? என்றும் தினேஷ் சங்கரிடம் பேசி இருக்கிறார்.
அப்போது, நீங்கள் நமது நிறுவனத்தின் எண்ணெயை இறக்குமதி செய்ய நான் உதவி செய்கிறேன். குறைந்த விலையில் மூலிகை எண்ணெய்களை தருகிறோம் என்று கூறிய நிலையில், தொழிலதிபர் தினேஷ் சங்கரும் இந்த தொழிலிலும் இறங்கி பார்த்துவிடலாம் என சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்தியாவில் செயல்பட்டு வரும் சர்மா டிரேடிங் என்ற நிறுவனத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெண் கூறியவாறு சிலமணிநேரத்தில் சங்கரை தொடர்பு கொண்டு பேசிய கும்பல், தங்களை சர்மா டிரேடிங் என்று அறிமுகம் செய்ய, அவரும் ரூ.25 இலட்சத்து 10 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், மூலிகை எண்ணெய் பல நாட்கள் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ், இலண்டன் பெண்ணை தொடர்பு கொள்கையில் அது முடியவில்லை. சர்மா டிரேடிங் நிறுவனமும் கம்பி நீட்டியுள்ளது. அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இதுபோன்ற மோசடிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இன்றளவும் நடைபெற்று வருகின்றன. ஆகையால், வெளிநாடு ஏற்றுமதி, இறக்குமதி, வணிகம் என வலைவிரிக்கும் கும்பல், பணத்தை பெற்று மோசடி செய்து வருகிறது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சுதாரித்து செயல்படவும் அல்லது தவிர்த்துவிடவும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.