1500 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில், பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞரின் சடலம்.. கொடைக்கானல் சரக்கு கூத்து, செல்பி மோகம்.!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வட்டகானல் ரெட்ராக் பகுதி பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளவை என்பதால், அப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருக்கின்றனர். ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள், வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி, அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி ஆபத்தான பகுதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 32) என்ற இளைஞர், தனது 8 நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ரெட்ராக் பகுதிக்கு சென்ற நிலையில், அங்கு வைத்து மதுபானம் அருந்தி செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். ராம்குமார் மட்டும் மலைப்பகுதியில் நுனிப்பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, 500 அடி பள்ளத்தில் தலைகுப்பற விழுந்த நிலையில், இந்த தகவல் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 1 வார தேடலுக்கு பின்னர் 1500 அடியில் ராம்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர், உள்ளுர் மக்கள் என 30 க்கும் மேற்பட்டோர் டிரோன் கேமரா உதவியுடன் இளைஞரை தேடி வந்த நிலையில், 1500 அடி பள்ளத்தில் பாறை இடுக்கு பகுதியில் சிக்கி உயிரிழந்த ராம்குமாரின் சடலம் அழுகிய நிலையில் இருக்கிறது. இன்று அவரின் சடலம் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் இளைஞரின் மகிழ்ச்சி விபரீதத்தை சந்தித்துள்ளது அப்பகுதிக்கு அலட்சியமாக செல்லும் ஒவ்வொருவருக்கும் பாடம் ஆகும்.