தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
போலி செயலியில் அதிர்ஷ்ட குலுக்கல்: ஆசையை தூண்டி இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி..!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகேயுள்ள கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி சந்தியா (24). இவர் எம்.பி.ஏ படித்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்து பணிபுரியும் விதமாக இணையதளங்களில் வேலை தேடிவந்தார். அப்போது வர்த்தக செயலி ஒன்றில் வார சம்பளத்திற்கு வீட்டிலிருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை பற்றிய விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட சந்தியாவிடம், வாட்ஸ்-அப் மூலம் பேசிய மர்ம நபர் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் வேலையை உறுதி செய்வதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பணத்தை செலுத்தி முன்பதிவு செய்த சந்தியாவை 20 நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட அந்த நபர் குலுக்கல் முறையில் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ.60 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாகவும், அதனை பெற முன்பணமாக ரூ.7.5 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சந்தியா தனது நகைகளை அடகு வைத்தும், உற்றார், உறவினர்களிடம் கடன் வாங்கியும் சுமார் ரூ.6 லட்சம் வரை பணத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் தவணை முறையில் செலுத்தியுள்ளார். இதன் பின்னர் குலுக்கலில் விழுந்த பரிசுத்தொகையை கேட்டுள்ளார். மழுப்பலான பதில் கூறிய அந்த நபர் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சந்தியா ஆவடி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதை யடுத்து ஆவடி காவல் கண்காணிப்பாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்படையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மர்ம நபரின் செல்போன் நம்பரை அடிப்படையாக கொண்டு விசாரனையை முடுக்கியதில், மோசடியில் ஈடுபட்டவர் சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மதன்குமார் (வயது 32) என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மதன்குமாரை நேற்று கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதன்குமார் போலியான பெயரில் வர்த்தக ஆன்லைன் செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி செய்து சந்தியாவிடம் பணத்தை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளர், மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.