உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி.! களத்தில் சந்திப்போம்.! கமல்ஹாசன் பரபரப்பு டுவிட்.!



kamal talk about local election

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகள்,கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே" என தெரிவித்துள்ளார்.