"ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதே ஆசை" - 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ரிஷி.! 



krishnagiri-hosur-sslc-student-ab-reshe-get-492-score-o

ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுதி ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதே தனது ஆசை. எதிர்காலத்தில் அதனை நிறைவேற்றுவேன் என்ற உறுதியை எடுத்துள்ள மாணவர் ரிஷியின் விடாமுயற்சியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

15 வயது மாணவர் ரிஷி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் எஸ். ஆனந்த். இவரின் மனைவி எஸ்.எஸ். பிருந்தா. தம்பதிகளின் மகன் ஏ.பி ரிஷி. 15 வயதாகும் மாணவர் ரிஷி, அங்குள்ள செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2023 - 2024ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். 

இதையும் படிங்க: அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்.. மீண்டும் டாப்பில்  நின்று சாதனை..! கவலைக்கிடமாகும் எதிர்காலம்.!!

வெளியான தேர்வு முடிவுகள்:

சிறுவயதில் இருந்து படிப்பில் படுசுட்டியாக இருந்து வந்த மாணவர் ஏ.பி ரிஷி, இலட்சக்கணக்கான மாணவர்களில் ஒருவராக பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளார். அவரின் பெற்றோரும் மகனின் மதிப்பெண்ணுக்காக காத்திருந்துள்ளனர். 

பள்ளியிலேயே முதலிடம் பெற்று சாதனை:

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் மாணவர் ரிஷி 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவராகவும் இருந்துள்ளார். கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள ஏ.பி ரிஷி, எஞ்சிய படங்களில் 97 மதிப்பெண்களை கடந்து இருக்கிறார். இதனால் மாணவர், அவரின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்து, தங்களின் பாராட்டுகளை மாணவருக்கு தெரிவித்தனர். 

10th Exam

நல்ல மதிப்பெண் பெற்றது எப்படி?

பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றது குறித்து மாணவர் ஏபி ரிஷி கூறுகையில், "நான் இந்த மதிப்பெண் பெறுவதற்கு காரணம் தொடர்ந்து பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருந்தேன். நான் படிக்கும்போது அதனை புரிந்துகொண்டு, ஒருமனதோடு பயின்றேன். தேர்வு விடைத்தாளில் எனது முன்னிலைப்படுத்துதலையும் (Presentation) திறம்பட வெளிப்படுத்தி இருந்தேன்.

ஐஐடி-யில் படிக்க ஆசை:

எதிர்வரும் 11 மற்றும் 12ம் வகுப்பில், கணினி அறிவியல் - கணிதத்துறையை தேர்வு செய்து படிக்க விரும்புகிறேன். இந்த படிப்பு நிறைவுபெறும் காலத்தில் உயர்கல்விக்கான ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுதி ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும். அதுவே எனது ஆசை. அதற்காக எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது பெற்றோர், ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்" என பேசினார். 

தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பயின்ற மாணவர்களுக்கான 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவரும், தங்களின் எதிர்கால நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் வெற்றியடைய எமது வாழ்த்துகள்.

இதையும் படிங்க: 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!