கஜா புயலால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் லாரன்ஸ்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வீடுகளின் மீது மரங்கள் விழுந்தும், கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டும் ஏழை விவசாயிகளின் வீடுகள் நாசமாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் புதிதாக ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரின் குழுவினர் ஒரு வயதான பாட்டியின் கூரை வீடு மீது மரம் விழுந்து முற்றிலும் சேதமடைந்திருப்பதை கண்டறிந்தனர். அந்த வயதான பாட்டிக்கு ஆதரவாக யாரும் இல்லை.
அந்த வயதான பாட்டியிடம் அழுவாதீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என ராகவா லாரன்ஸ் கேட்க, அதற்கு அந்த பாட்டி தனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு ஒரு குடிசை மட்டும் போதும் என கூறுகிறார். இதனை ராகவா லாரன்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த பதிவு பார்பவர்கள் நெஞ்சை உருக வைப்பதோடு கண் கலங்க வைக்கும் வகையில் அமைந்தது.
இந்நிலையில் அந்த பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் அறிவித்த 50 வீடுகளில் முதல் வீடாக அந்த பாட்டிக்கு வீடு காட்டிக்கொடுக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து இன்று அந்த பாட்டியின் இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை தனது குழுவினருடன் நடத்தினார் நடிகர் லாரன்ஸ்.