வடமாநில கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த விவகாரம்: ஆளுநர் முழு பொறுப்பு - வைகோ பரபரப்பு பேட்டி.!
ஆன்லைன் ரம்மியில் ரூ.70 ஆயிரம் பணத்தை இழந்த கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த விவகாரத்தில், ஆளுநர் முழு பொறுப்பேற்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி இருக்கிறார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளி அஜய் குமார். இவரின் மனைவி மந்தனா. தம்பதிகள் இருவரும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்து வந்த மந்தனா ஆன்லைன் ரம்மியில் ரூ.70 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனை அறிந்த அஜய் குமார் மனைவியை கண்டித்ததால், கர்ப்பிணி பெண் மனதுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் அஜய் குமாரிடம் விசாரணை நடத்தியபோது ரம்மியால் நடந்த சோகம் அம்பலமானது.
முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி மீதான அவசர சட்டத்தை நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், திமுக தலைமையிலான இன்றைய ஆட்சியில் சட்டப்பேரவையில் ரம்மிக்கு எதிரான தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் ரம்மி மீதான தடைச்சட்டத்தை ஒப்புதல் அளிக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தார். அவர் விரைந்து அச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வந்தது. இதற்கிடையில் மேற்கூறிய கர்ப்பிணி பெண்ணின் மரணமும் நடந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து கடுமையான கொந்தளிப்பு உள்ளாகிய மதிமுக வைகோ, "ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உயிர் பறிபோயுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்திருந்தால், அவ்வுயிர் போயிருக்காது. ஆளுநர் அதிகார ஆணவத்துடன் நடந்துகொண்டுள்ளார். பெண்ணின் மரணத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.