மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆர்.டி.ஓ ஆஃபீஸ் முற்றுகை: 1 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..!



RTO office besieged claiming mystery in daughter's death

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள புது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷ் ( 27). கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மகள் வைஷ்ணவி (24). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியின் பெற்றோர், தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக குற்றஞ்சாட்டினர். மேலும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகளை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, உடையார்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, வைஷ்ணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடையார்பாளையம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்தூறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதின் பின்னர் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.