தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் பரபரப்பு...!! மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-ஆம் ஆண்டு முதல், 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 81 போிடம் பணம் வாங்கி, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது அவர் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அப்போது அவர் வழக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் முன்னிலையில் ஆஜர் ஆனார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விட்டது என்றும், எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று செந்தில்பாலாஜி உட்பட இந்த மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும், மேலும் இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, முறைகேடாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் போன்றவர்கள் மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை போன்றவற்றை அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது மயங்கி விழுந்ததில், இருதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்து, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செந்தில்பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய வழக்கில் 178 பேருக்கு சம்மன் அனுப்பி அதில் 58 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், மீதி 120 பேரிடம் விசாரிக்க இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர். தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீரானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
அதன்படி ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்கலாம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
மேலும் அவரை மருத்துமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்றும் சிகிச்சையில் இருக்கும் நாட்கள் நீதிமன்ற காவலாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பினால் மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்து வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி மூலம் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், மூன்றாவது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின் தீர்ப்பாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.