அதிகரித்துவரும் கொரோனா! சிறப்பு ரயில்களின் ரத்து மேலும் நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல கட்டங்களாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பல மாவட்டங்களில் பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஒரு மாதமாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தீவிரமாகி வருவதால், தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி, செங்கல்பட்டு – திருச்சி, அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.