கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்.! மூடப்பட்ட அறையில் ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்.!



srimathi death case

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அங்கு போராட்டம் நடைபெற்று அது கலவரம் ஆகியது.

இதனையடுத்து உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது.

இந்தநிலையில், மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் காவல் துறையினரிடம் விரிவாக பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படுவதால் மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து, அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றனர்.

அதன் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர், அவர்களது பெற்றோா் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி தங்கள் தோழி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.