சென்னையில் முழு ஊரடங்கு! சொந்த ஊருக்கு படையெடுத்த தென்மாவட்ட மக்கள்! திடீர் போக்குவரத்து நெரிசல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,373 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த முறை இருந்ததை விட இந்த ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து சென்னக்கு வந்து, ஆட்டோ, கார் ஓட்டி பிழைத்து வந்தவர்களும் தினக்கூலி செய்து வந்தவர்களும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
நேற்றிரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமானவர்கள் வாகனங்களில் புறப்பட்டனர். இதன் காரணமாக பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இ-பாஸ் குறித்த சோதனை மேற்கொண்டபின்னரே வாகனங்களை அனுப்பி வைத்தனர்.