மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்..!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மணிகண்டன், முகத்தில் சந்தனம் பூசிக் கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டும் நூதனமான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டியிருந்தார்.
இதனை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதையும், வேலை எதுவும் இல்லாததால் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்படுவதையும் கூறினார். மேலும், இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்குவதுடன், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளிக்க வந்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து மணிகண்டனிடம் பேசிய காவல்துறையினர், உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு சென்றார்.