மின்சார வாரிய தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா! வெடிக்கும் சர்ச்சை
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய இளநிலைப் பொறியாளர் பதவிக்கான தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும், முன்கூட்டியே வெளியாகிவிட்டதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
TNEB சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் பொறுப்புக்கான தேர்வு, நேற்றைய தினம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மாநகர் பகுதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
80 ஆயிரத்திற்கும் மேலானோர் இந்த தேர்வை எழுதினர். நேற்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே சட்டவிரோதமாக வெளியாகியிருப்பதாக, படங்களுடன் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டுவருகிறது. இதனால், தேர்வில் கலந்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
தேர்வில் கேட்கப்பட்டுள்ள அனைத்து 120 வினாக்களும் விடையுடன் ஒரு டைரியில் எழுதப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் திரும்ப பெற்றுகொண்டபட்சத்தில் ஒருவர் அனைத்து வினாக்களையும் மணப்பாடமாக டைரியில் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், இந்த வினாக்கள் அனைத்தும் தேர்விற்கு முன்பாகவே வெளியாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.