சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 18 பேர் படுகாயம்.! திண்டிவனம் அருகே சோகம்.!!
நள்ளிரவு நேரத்தில் ஐயப்ப பக்தர்கள் புறப்பட்ட சபரிமலை பயணம் அதிகாலை விபத்தை சந்தித்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வர முடிவெடுத்து, நேற்று நள்ளிரவு நேரத்தில் 22 பேர் வேனில் புறப்பட்டு பயணம் செய்துகொண்டு இருந்தனர். வேனை ஓட்டுநர் சந்திரசேகர் இயக்கியுள்ளார்.
இவர்களின் வாகனம் இன்று அதிகாலை 05:15 மணியளவில் திண்டிவனம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு இயங்கி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 8 வயது சிறுமி உட்பட 18 பேர் காயமடைந்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.