சுந்தர மகாலிங்கத்தில் பரிதாபம்: மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பரிதாப பலி..!
மலைமீது ஏறி பயணம் செய்த 2 பக்தர்கள் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
சுந்தர மகாலிங்கம் வனத்துறையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் அனுமதிக்கும் நேரங்களில் மட்டுமே மலைமீது செல்ல இயலும். மழை பெய்யும் சமயங்களில் வெள்ளம் காரணமாக பக்தர்கள் அனுமதி செய்யப்படமாட்டார்கள். மலையின் மீது எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால், 4500 அடியையும் பக்தர்கள் நடந்து கடந்து இறைவனை தரிசிக்கின்றனர்.
தற்போது, புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு அக்டோபர் 5ம் தேதி வரை 13 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் நடராஜன் என்பவர், கோரக்கர் குகை அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 46), மலை மீது ஏறும்போது வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே மூச்சுத்திணறி உயிரிழந்தார். இவர்களின் உடல் தானிப்பாடி அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிற பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி கோவிலில் அடிப்படை மருத்துவ வசதி இல்லாததே பக்தர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் வேதனை தெரிவிக்கப்படுகிறது.