நாடக காதலனை நம்பி செல்ஃபி எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவி: 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய காதலனுக்கு காப்பு போட்ட போலீஸ்..!



Youth arrested for threatening to post intimate photos of college students on social media

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த இளம் பெண். இவர் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த முகேஷ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகேஷுடன் நெருங்கி பழகி வந்த இளம் பெண் ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இதனை பயன்படுத்தி முகேஷ் இளம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் செல்ஃபி எடுத்துள்ளார்.

இதன் பின்னர் முகேஷின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த இளம் பெண் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தூள்ளார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட முகேஷ் 5 லட்ச ரூபாய் பணம் கொடு இல்லை என்றால் உன்னுடன் நான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணுடைய தம்பியிடம் போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி-கள் மூலம் தொடர்புகொண்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

முகேஷின் தொடர் மிரட்டலால் அச்சமடைந்த இளம் பெண், முகேஷ் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய  சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப், முகேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், இளம் பெண்ணை மிரட்டியதை முகேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். முகேஷ் தனது குற்றத்தை ஒப்புக் கெண்டதை அடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி, முகேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.