சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வரிகள் குறைப்பு.. விலை குறையும் பொருட்களின் பட்டியல் !!
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டம் இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் கூறப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 200-க்கும் அதிகமான பொருட்களுக்கும், கடந்த ஜனவரி மாதம் 29 பொருட்களுக் கும் வரி குறைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. அதன்படி, சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன.
பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின், கல், பளிங்கு கல், மரம் ஆகியவற்றில் செய்யப்படும் சாமி சிலைகள், சாதாரண ராக்கி கயிறு, துடைப்பம் செய்ய பயன்படும் கச்சா பொருள், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசு வெளியிடும் நினைவு நாணயங்கள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய விவரம் வருமாறு:-
கைத்தறி ஜமக்காளம், எண்ணெய் கம்பெனிகளுக்கான எத்தனால் எண்ணெய், ரூ.1,000 வரையிலான காலணிகள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மின்னணு புத்தகங்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
கைப்பைகள், நகைப்பெட்டி, கலைநயத்துடன் கூடிய கண்ணாடி சட்டங்கள், கையினால் செய்யப்படும் விளக்குகள் ஆகியவற்றின் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
27 அங்குலம் வரையிலான டி.வி., வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், வீடியோ கேம்ஸ், வாக்குவம் கிளனர், டிராக்டர் டிரைலர், மிக்சி, கிரைண்டர், ஷேவிங் கருவி, ஹேர்டிரையர், அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், வாட்டர் கூலர், வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், தோலில் செய்யப்படும் பொருட்கள், லித்தியம் அயன் பேட்டரி, பெயிண்ட், வார்னிஷ், வால் புட்டி ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
வரி குறைக்கப்பட்டு இருப்பதால் மேற்கண்ட பொருட்களின் விலை குறையும். இந்த வரி குறைப்பு வருகிற 27-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரூ.5 கோடி வரை வர்த்தகம் (விற்றுமுதல்) செய்வோர் வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து மாதாந்திர அடிப்படையில் ஜி.எஸ்.டி. வரியை செலுத்தலாம். 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வரி கணக்கை தாக் கல் செய்யவேண்டும். இதன்மூலம் 93 சதவீத வர்த்தகர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் கீழ் இதுவரை பதிவு செய்து கொள்ளாதவர்கள், தங்களை பதிவு செய்துகொள்வதற்கான காலக்கெடு வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு 4-ந் தேதி நடைபெறும் என்றும், அதில் சிறு வியாபாரிகள், தொழில்முனைவோர் சந்திக் கும் பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் நேற்று கூட்டம் முடிந்ததும் மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.