தமிழ்நாட்டில் நிலவிய அதே நிலை இன்று கேரளாவில் நிலவுகிறது - நடிகர் சித்தார்த் ட்வீட்



actor sidarth compares kerala flood with TN flood

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

kerala flood

மத்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறினார்.

எர்ணாகுளத்தில் ஐந்து ஹெலிகாப்டர்கள், சாலக்குடியில் மூன்று ஹெலிகாப்டர்கள், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் தலா ஒரு ஹெலிகாப்டர் ஆகியன மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமர் மோதியுடன் முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாகவும் முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கேரளா செல்ல உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

kerala flood

இதனிடையே 2015இல் தமிழ்நாட்டில் இருந்த அதே கோபமும் கைவிடப்பட்ட நிலையும் தற்போது கேரளாவில் நிலவுவதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தேசிய ஊடகங்கள் கேரள வெள்ளத்திற்கு கவனத்தை செலுத்துமாறு வலியுறுத்தியும் வேண்டியும் கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.